இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

21.01.2010 பாராட்டு விழாவில் தமிழக முதல்வரின் உரை

தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பினால், நேற்று (21.01.10) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்ட' நன்றி பாராட்டும் விழாவில்' கலந்து கொண்ட தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, கல்விச் சேவையில், இடைநிலை ஆசிரியர்களாகப் பணியாற்றும் தகமை பெற்ற பார்வையற்றோர்களுக்கு பணிநியமனச் சான்றுகளை வழங்கினார்.

சமூகநலத்துறை அமைச்சர் திருமதி: கீதா ஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். சிறப்புரை ஆற்றிய தமிழக முதல்வர் கலைஞர், இங்கே நம்முடைய அமைச்சர் கீதாஜீவன் எடுத்துக்காட்டியதைப் போல் - கனிமொழி குறிப்பிட்டதைப் போல், சில மாதங்களுக்கு முன்பு உங்களுடைய இருபதுக்கு மேற்பட்ட கோரிக்கைகளை இருபதே நிமிடத்தில் பார்த்துப் படித்து, தமிழக அரசின் சார்பில் அதை நிறைவேற்றி அறிவித்த நிலையை நீங்கள் மறந்துவிடவில்லை. மறந்திருந்தால், நன்றி கூற வந்திருக்க மாட்டீர்கள், மறந்திருந்தால் இந்தப் பாராட்டு விழாவை நடத்தியிருக்க மாட்டீர்கள்.

நான் எதிர்பார்ப்பது இன்னும் பல பாராட்டு விழாக்கள் எனக்கு நடைபெற வேண்டும் என்று தான் எனக் குறிப்பிட்டார். கலைஞர் அவர்களின் இந்தக் கூற்றுக்கு பலத்த கரகோஷம் எழுந்தது. அங்கு அவர் ஆற்றிய உரையின் முழு வடிவம் கீழே;


ஊனமுற்றோர் என அழைக்கப்படும் என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே, வள்ளுவர் கோட்டம் நிரம்பி வழிகின்ற வகையில் குழுமி யிருக்கின்ற நீங்கள் எல்லாம் எதையும் எதிர்பார்த்து அல்ல – ஏனென்றால் எதிர்பார்ப்பதைத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லாமலேயே என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொண்டு நடத்துகின்ற ஆட்சிக்கு தலைவனாக இருக்கிறேன் என்ற முறையில் – அந்த நம்பிக்கையோடு நீங்கள் எல்லாம் இங்கே கூடியிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெளிவாக, நன்றாகத் தெரியும். எனக்கு நன்றி பாராட்டுகின்ற விழா என்று விளம்பரங்கள் மூலமாக நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.


உங்களுடைய கால் ஊனம் நீங்கி, நீங்கள் நடந்தால் அதுவே நான் மகிழ்ச்சியடையும் நிகழ்ச்சி. (கைதட்டல்) கண் பார்வை பெற்று நீங்கள் காணுகின்ற வாய்ப்பைப் பெற்றால், அதுவே நான் காணக் கிடைக்காத காட்சி. (கைதட்டல்) உங்களை ஊனமுற்றோர் என்ற சமுதாயத்திலே ஒரு தனிப் பிரிவாகப் பார்க்க நான் விரும்பவில்லை. ஆனாலும் ஊனமுற்றோர் என்று சொன்னால் தான் உங்களுக்கு உதவிட முடியக்கூடிய நிலைமை இருக்கின்ற காரணத்தால், அப்படி குறிப்பால் உணர்த்த வேண்டிய நெருக்கடி, கட்டாயம் நாட்டிலே இருக்கின்றது. அரசுக்கும் இருக்கின்றது. பிற்படுத்தப்பட்டோர் என்று சொன்னால் அடையாளம் காட்டினால் தான் அவர்களுக்கு எப்படி சலுகைகள், ஒதுக்கீடுகள் வழங்கிட முடிகிறதோ, அதைப் போல ஊனமுற்றோர் என்று சொன்னால் தான் சில உதவிகளை, சட்டப்படி, விதிப்படி வழங்க முடிகிறது.


அதற்காக ஒரு பெயரளவில் உங்களுக்கு நன்மை செய்வதற்காகவே, உங்களை ஊனமுற்றோர் என்றும், பார்வையற்றோர் என்றும், காது கேளாதோர் என்றும் சொல்ல வேண்டிய அவசியத்தில் நாங்கள் இருக்கின்ற காரணத்தால் அப்படி சொல்வதற்காக என்னை நீங்கள் மன்னித்து விட வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். ஒரு ரோஜாவில் காம்பைக் கிள்ளி விட்டால், அந்த ரோஜா மலருக்கு மணம் இல்லாமல் போய் விடாது. அப்படித் தான் எப்படி காம்பைக் கிள்ளினால் மலருக்கு மணம் இல்லாமல் போய் விடாதோ அதைப் போல கால் இல்லாவிட்டாலும் மனிதர்களுக்கும் மணமே இல்லாமல் போய் விடும் என்று யாரும் கருத முடியாது. அப்படிக் கருதினால் அவனைப் போன்ற மடையர்கள் உலகத்திலே யாரும் இருக்கவும் முடியாது. அந்த வகையில் தமிழகத்திலே இன்றைக்கு அறிஞர் அண்ணா அவர்களுடைய வழியில், தந்தை பெரியார் அவர்களுடைய வழியில் நடைபெறுகின்ற இந்த ஆட்சி மனித நேய ஆட்சி - மனித சமுதாயத்திற்காக தன்னை ஒப்படைத்துக் கொண்டு நடைபெறுகின்ற ஆட்சி.


மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்பதற்காக நடைபெறுகின்ற ஆட்சி. அதை வலியுறுத்தி, அந்தக் கருத்தை வலுப்படுத்தி, அந்தக் கருத்துக்கு வெற்றியினைத் தேடுகின்ற ஆட்சி தான் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஆட்சி. என்னைப் பொறுத்தவரையில் நான் இன்று நேற்றல்ல – பல்லாண்டு காலமாக உங்களைப் பற்றி - ஆட்சியிலே இருந்தாலும், இல்லாவிட்டாலும் கவலைப் பட்டுக் கொண்டிருப்பவன். அந்த கவலை தீர எனக்கு உடனடியான வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அந்த வாய்ப்பை உங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறாதவன் நான்.


நான் என்னுடைய கண் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்றிருந்தேன். அமெரிக்காவில் - ஒரு நகரத்தில் - என்னை அழைத்துச் சென்ற மருத்துவர்களும், அமெரிக்க மருத்துவர்களும், மற்றவர்களும் அமர்ந்து ஒரு திரையரங்கத்திலே - அமெரிக்க அரசின் சார்பாக வெளியிடப்பட்ட ஒரு படத்தைப் பார்த்தோம். கண்ணொளி இழந்தவர்களுக்கு கண்ணொளி வழங்கு கின்ற ஒரு திட்டத்தை அமெரிக்காவில் எந்த வகையிலே பல்லாயிரக்கணக்கான வர்களுக்கெல்லாம் வழங்குகின்றார்கள் என்பதைக் கண்டேன். அப்படிப் பார்த்த வுடன் மீண்டும் சென்னைக்கு வந்தவுடன், அன்றைக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த நம்முடைய பேராசிரியர் அவர்களை அழைத்து நான் அமெரிக்காவிலே கண்ட அந்தக் காட்சியைச் சொல்லி, ஏன் அதைப் போல கண்ணொளி வழங்குகின்ற முகாம்களை நாம் தமிழகக் கிராமப் பகுதிகளிலே நடத்தக் கூடாது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று கேட்டேன். அவர்களும் உடனடியாக அதை ஒப்புக் கொண்டு அன்றைக்கு அறிவிக்கப்பட்ட திட்டம் தான் கண்ணொளி வழங்கும் திட்டம் ஆகும். (கைதட்டல்)


அந்தத் திட்டத்தை அரசாங்கம் மாத்திரம் தனியாக நிறைவேற்ற இயலாது என்பதால், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு வட்டத்திலும் ஒவ்வொரு நகரத்திலும் அந்தப் பகுதியிலே வாழ்கின்ற பெருமக்கள், சீமான்கள், பணக்கார பிரமுகர்கள், நல்ல உள்ளம் படைத்தோர், ஏழையெளியவர்களுக்காக, ஊனமுற்ற மக்களுக்காக உதவிட வேண்டுமென்று கருதுவோர் இந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் அரசின் சார்பாக எவ்வளவு ஆதரவு தர வேண்டுமோ - இந்தத் திட்டம் வெற்றி பெற அவ்வளவு ஆதரவு தருவோமென்று - கண் பார்வை இழந்தவர்களுக்கு கண்ணொளி வழங்குகின்ற முகாம்களை தமிழகம் முழுவதும் உருவாக்கி, இலட்சக்கணக்கான மக்களுக்கு உதவி புரிந்தோம். இலட்சக்கணக்கானோர் கண் பார்வை பெற்றார்கள். இன்றைக்கும் அதன் அடையாளமாக சென்னையிலே உள்ள அண்ணா அறிவாலயத்தில் காலை முதல் இரவு வரையில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு, நூற்றுக்கணக்கானவர்களுக்கு கண்ணொளி வழங்க அறுவை சிகிச்சை செய்ய தனி மருத்துவர்கள் நியமிக்கப் பட்டு, கண் ஒளி வழங்குகின்ற நிலை தமிழகத்திலே இன்னமும் தொடர்ந்து வேறு சில மருத்துவ மனைகளிலும் அவர்களும் இதைப் பின்பற்றி நடத்துகின்ற காட்சியை நாம் காண்கிறோம்.


அதைப் போலத் தான் உடல் ஊனமுற்றோர் என்பது கண் இழந்தவர்கள் மாத்திரமல்ல, கை இழந்தவர்கள், கால் இழந்தவர்கள், செவிப்பறை இழந்தவர்கள் இவர்களுக்கெல்லாம் கூட உதவிட வேண்டிய பெரும் பொறுப்பு இந்த அரசுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து காலமெல்லாம் அவர்களுக்காக நாங்கள் பாடு பட்டு வருகிறோம். அதைத் தான் இங்கே பேசிய ஒருவர் குறிப்பிட்டார் - ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 23 கோடி ரூபாயை மட்டுமே செலவழித்த இருந்த அரசையும் - இன்றைக்கு இருக்கின்ற அரசு இந்த ஆண்டு இதற்காக 107 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறது என்பதையும் குறிப்பிட்டார்கள். 100 கோடி ரூபாய் அல்ல - நீங்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்றால் என்னுடைய சுய நலத்திற்காகச் சொல்கிறேன் - அந்த மகிழ்ச்சியிலே எனக்கும் பங்கு உண்டு என்பதற்காக 100 கோடி ரூபாய் அல்ல - உங்களுக்காக ஆயிரம் கோடி ரூபாய் கூட செலவிட இந்த அரசு தயாராக இருக்கின்றது.


இங்கே நம்முடைய அமைச்சர் கீதாஜீவன் எடுத்துக்காட்டியதைப் போல் - கனிமொழி குறிப்பிட்டதைப் போல் உங்களுடைய இருபதுக்கு மேற்பட்ட கோரிக்கைகளை இருபதே நிமிடத்தில் பார்த்துப் படித்து, அதை நிறைவேற்றி அறிவித்த நிலையையும் கடந்த காலத்திலே சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசின் சார்பில் நடைபெற்றதை நீங்கள் மறந்துவிடவில்லை. மறந்திருந்தால், நன்றி கூற வந்திருக்க மாட்டீர்கள், மறந்திருந்தால் இந்தப் பாராட்டு விழாவை நடத்தியிருக்க மாட்டீர்கள். நான் எதிர்பார்ப்பது இன்னும் பல பாராட்டு விழாக்கள் எனக்கு நடைபெற வேண்டும் என்று தான். (கைதட்டல்)


சட்டமன்றத்திலே ஒருவர் குறிப்பிட்டார் - கருணாநிதிக்கு சினிமா நடிகர் களின் பாராட்டு தான் பிடிக்கும், பொது மக்களுடைய பாராட்டு பிடிக்காது என்றார். அதிலே ஒரு உண்மை இருக்கிறது. பொதுவான பொது மக்களின் பாராட்டை விட, பொதுமக்களிலே ஒரு பிரிவாக இருக்கின்ற கண் இழந்தோர், கால் இழந்தோர், பேச முடியாதோர், காதுகேளாதோர் இத்தகைய ஊனமுற்றவர் களுடைய பாராட்டு தான் எனக்கு மிக அதிகமாக இனிக்கிறது. (கைதட்டல்) அது தான் என்னை மெய் சிலிர்க்க வைக்கின்றது. மேலும்மேலும் உங்களுக்கு துணை நிற்க வேண்டுமென்று நான் கருதுகிறேன் என்றால், அப்படி துணை நிற்பதற்கு ஏற்ற வகையிலே கடந்த காலத்திலே உங்களுக்காக வழங்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றங்கள் எப்படியெல்லாம் நடைமுறைகளிலே இருக்கின்றது என்பதை கீதா ஜீவன் அவர்கள் இங்கே எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். கனி மொழி குறிப்பிட்டார்கள். விழாத் தலைவர் நம்முடைய சிதம்பரநாதனும் எடுத்துக் கூறியிருக்கிறார். மேலும் பல கோரிக்கைகளை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். வைக்கவும் இருக்கிறீர்கள். (கைதட்டல்)


புதிய சட்டமன்றக் கட்டிடம், புதிய பட்ஜெட் இவையெல்லாம் வரும்போது உங்களுடைய புதிய கோரிக்கைகளும் அங்கே இடம் பெறும் என்று நான் நம்புகிறேன். (கைதட்டல்) ஊனமுற்றோர் சங்கங்களின் மதிப்பிற்குரிய பிரதிநிதிகள் 19-8-2008 அன்று, தலைமைச் செயலகத்தில் வந்து என்னைச் சந்தித்தபோது, உறுதி மொழி வழங்கி அரசின் சார்பில் சில அறிவிப்புகளை வெளியிட்டோம். அரசின் பல்வேறு துறைகளிலும், ஊனமுற்றோர்க்கான வேலைவாய்ப்பிற்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டினை உறுதி செய்ய வேண்டுமென்று கேட்டீர்கள். நம்முடைய சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவனுடைய தலைமையில் ஒரு உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டு, அந்தக் கோரிக்கையை நிறைவேற்றி நடைமுறைப்படுத்தி அப்படி நடைமுறைப்படுத்தியதில் 3 சதவிகித இட ஒதுக்கீட்டை தந்து இதுவரையிலே 2000 பேர் பயன்பெற்றிருக்கிறார்கள் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.


ஊனமுற்றோர், அவர்கள் வாழும் மாவட்டத்தில் 100 கிலோ மீட்டருக்குள் இலவசமாகப் பயணம் செய்ய, இலவசப் பேருந்துப் பயணச் சலுகை தேவையென்று கேட்டீர்கள். அது வழங்கப்பட்டது என்பதும் உங்களுக்குத் தெரியும். அதே ஆண்டில், கால் ஊனமுற்றவர்களுக்கும், பார்வையற்றோருக்கும் அரசு விரைவுப் பேருந்துகளில் தமது இருப்பிடத்திலிருந்து தமிழகத்திற்குள் ஏதாவது ஓரிடத்திற்குச் சென்று வர, ஆண்டுக்கு ஒருமுறை இலவசப் பேருந்து பயணச் சலுகை கழக அரசினால் வழங்கப்பட்டு, அது நடைமுறையில் இருக்கிறது. இதில் எங்கேயாவது குற்றம் குறை இருந்தால், ஏதாவது தவறு நடைபெற்றால் ஒரு கடிதம் குறிப்பிட்டு எனக்கு எழுதுங்கள் போதும், அல்லது அமைச்சருக்கு தெரிவியுங்கள் போதும் (கைதட்டல்).


பேருந்துகளிலே ஊனமுற்றோர் தமிழகம் முழுவதும் பயணம் செய்ய 75 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்பட்டு, இதுவரையில் 2 இலட்சத்து 31 ஆயிரத்து 474 ரூபாய்ச் செலவில் 8 ஆயிரத்து 38 ஊனமுற்றோர் பயனடைந்துள்ளனர் என்ற மகிழ்ச்சியான தகவலையும் உங்களுக்கு நான் தெரிவிக்கின்றேன். பாரத பிரதமர் வேலைவாய்ப்பினை உருவாக்கும் திட்டத்தின்கீழ் சுயவேலை வாய்ப்புக்கான ஊனமுற்றோரின் 5 சதவீதப் பங்குத் தொகையினை - அதிகபட்சமாக 1 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை - தமிழக அரசே ஏற்கும் என வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இதுவரையில் அதன் காரணமாக, அந்த அடிப்படையில் 60 ஊனமுற்றோர் பயனடைந்துள்ளனர். (கைதட்டல்)


தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகத் தொகுப்பூதியத்தின்கீழ் பணியாற்றிவரும் ஊனமுற்றோர்க்குக் காலமுறை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதற்கேற்ப, தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஊனமுற்றோர் கண்டறியப்பட்டு, அவர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன (கைதட்டல்) என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உயர்கல்வி பெறும் ஊனமுற்ற மாணவ, மாணவியர் அனைவர்க்கும் கல்விக் கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டதற்கேற்ப இதுவரை 206 ஊனமுற்றோருக்கு உயர்கல்விக் கட்டணத் தொகை 8 இலட்சத்து 72 ஆயிரத்து 450 ரூபாய் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். (கைதட்டல்)


மாவட்டந்தோறும் தங்கும் விடுதியுடன்கூடிய தொழிற் பயிற்சித் திட்டம் மூன்றாண்டு திட்டமாக அரசு நிதி உதவியுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஊனமுற்றோருக்காகத் தொடங்கப்படுமென அறிவிக்கப்பட்டதற்கேற்ப முதற்கட்டமாக, சென்னை, மதுரை, வேலூர், திருவள்ளூர், கோவை, நெல்லை, திருச்சி, ஈரோடு தருமபுரி, காஞ்சிபுரம், தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய 12 மாவட்டங்களில் 15 தொண்டு நிறுவனங்களின் மூலம் 65 இலட்ச ரூபாய்ச் செலவில், ஆண்டுக்கு 360 ஊனமுற்றோர்க்கு விடுதி வசதியுடன் கூடிய தொழிற் பயிற்சிகள் அளித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


ஊனமுற்றோர் நலனுக்காக ஒரு தனிக் கொள்கை உருவாக்கப்பட்டு, விரைவில் வெளியிடப் படும் என அறிவிக்கப்பட்டதற்கேற்ப ஊனமுற்றோர் நலனுக்காக மாநிலக் கொள்கை வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். (கைதட்டல்)


மேலும் இந்த விழாவிலே புதிய அறிவிப்புகள் - இந்த விழாவுக்கான அறிவிப்புகள் -- பட்ஜெட்டுக்கான பசுமையான அறிவிப்புகள் பட்ஜெட்டின் போது வெளியிடப்படும். இப்போது சில அறிவிப்புகள். ஊனமுற்றோர் வேலைவாய்ப்பு பெறும்வகையில் ஊனமுற்றோர்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணியிடங்களுக்கு சிறப்புப் பணியாளர் நியமனத் தேர்வு முறையில் அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். (கைதட்டல்) ஒவ்வொரு ஆண்டும் ஊனமுற்றோர் திருமண நிதியுதவி திட்டத்தின்கீழ் 490 பயனாளிகள் பயன்பெற்று வருகிறார்கள். இந்த ஆண்டு கூடுதலாக 1100 பயனாளிகளுக்கு இத்திட்டத்தின்கீழ் நிதியுதவி அளிக்கப்படும். இதற்காக அரசுக்கு 2 கோடியே 20 இலட்ச ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.


தற்போது கை, கால் ஊனமுற்றோர் மற்றும் பார்வையற்றோர்க்கு மாத ஓய்வூதியமாக 400 ரூபாய் வழங்கப்பட்டு வரும், ஊனமுற்றோர் ஓய்வூதியத் திட்டம் இனி செவித் திறன் குறையுடையோர்க்கும், வாய் பேச முடியாதவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு செயல்படுத்தப்படும். செவித் திறன் இழந்தோர், வாய் பேச முடியாதோரும் ஊனமுற்றோர் பட்டியலிலே இனி சேர்க்கப்படுவார்கள். மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டிகள் கோரி விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள 600 பயனாளிகளுக்கு இந்த ஆண்டே மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டிகள் வழங்கப்படும். இதற்காக அரசுக்கு 1 கோடியே 20 இலட்ச ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.


பார்வையற்றோர்க்கு வழங்கப்பட்டு வருவதைப் போலவே வேலை வாய்ப்பற்றோர் நிவாரணத் தொகை இனி அனைத்துவகை ஊனமுற்றோர்க்கும் வழங்கப்படும். பார்வையற்றோருக்கு மாத்திரமல்ல, அனைத்து வகை ஊனமுற்றோருக்கும் இது வழங்கப்படும். இதன் மூலம், 59 ஆயிரத்து 427 ஊனமுற்றோர் பயன்பெறுவர். இதற்காக அரசுக்கு ஏறத்தாழ 23 கோடியே 93 இலட்ச ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். முதலிலேயே சொன்னேன் - கோடிகள் அல்ல பெரிது - பணம் அல்ல பெரிது - உங்களையெல்லாம் வாழ வைக்க இந்த மனம் தான் பெரிதாக இருக்க வேண்டும், அந்த மனம் படைத்த அரசு, இந்த அரசு என்பதைக் கூறி உங்களுடைய பாராட்டுக்கும் நன்றிக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து இந்த அளவில் என் உரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி : தமிழ் மீடியா

No comments:

Post a Comment