பல முக்கியமான இரயில் நிலையங்களில் தனியார் நிறுவனமான பார்திஏர்டெல் மூலமாக பேட்டரி மூலம் ஓடக்கூடிய அருமையான கார்கள் வலம்வந்துகொண்டிருக்கின்றன. இது இந்த நிறுவனத்தின் விளம்பரத்திற்காகவும், சமூகசேவைக்காகவும் இருக்கலாம். எந்த வகையில் இருந்தாலும் அந்த முயற்சியினை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். ஏனென்றால் முதியவர்களுக்கும் மாற்றுத்திறனாளர்களுக்கும் மிகவும் பயன்படக்கூடிய ஒரு அருமையான திட்டமாகும். அதற்காகத்தான் அந்த நிறுவனத்தினை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் எனக் கூறினேன்.
இத்திட்டம் ஏர்டெல் நிறுவனத்தால் துவங்கப்பட்ட ஆரம்பக்காலத்தில் அனைவருக்கும் அருமையான சேவையை செய்தன இந்த பேட்டரி கார்கள். நாட்கள் செல்லச்செல்ல அரசாங்கத்தின் திட்டங்களைப்போன்றே இத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டுவிடும் என்றே தோன்றுகிறது. காரணமாக இடையிடையே நடக்கும் சம்பவங்களைக் கூறினாலும் நேற்று சென்னையிலும் திருச்சியிலும் நடந்த சம்பவங்களைக் கூறலாம்.
சென்னையில் ஒன்றுமுதல் ஐந்து நடைமேடைகளுக்கு அந்த பேட்டரி கார் செல்லும் வகையில் நடைமேடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நான்காவது நடைமேடையிலிருந்து ஐந்தாவது நடைமேடையில் நின்ற இராமேஸ்வரம் விரைவு வண்டிக்கு செல்லவேண்டிய நடந்து செல்ல முடியாத நிலையில் இருந்த சிலருக்காக பேட்டரி காரை தொழைபேசியில் அழைத்தபொழுது அதன் ஓட்டுநரிடமிருந்து தட்டிக்கழிக்கும் விதமான பதிலாக ஐந்தாவது நடைமேடைக்கு வண்டி செல்லாது என்ற பதில் வந்தது. பின்னர் நானும் அவர்களும் கடின முயற்சிக்குப்பிறகு நடந்து பாலம் ஏரி ஐந்தாவது நடைமேடைக்கு சென்றோம். நான் முன்பே முன்பதிவு செய்திருந்ததால் எனது பெட்டியை கண்டுபிடித்து ஏறி அமர்ந்தேன். ஆனால் மற்ற மாற்றுத்திறனாளர்கள் அவர்கள் ஏறவேண்டிய பெட்டி முன்புறத்திலா பின்புறத்திலா என கண்டுபிடிக்க முடியாமல் அலைபாய்ந்துகொண்டிருந்தனர்.
ஆனால் சிறிது நேரத்தில் வராது எனக்கூறிய ஐந்தாம் எண் நடைமேடைக்கு அதே பேட்டரி வண்டி வந்தது, மற்றவர்களை ஏற்றிக்கொண்டு, இது எப்படி சாத்தியமாகும். ஒரு வேலை மாற்றுத்திறனாளர்கள் என்ற இளப்பமா அல்லது மற்றவர்களை ஏற்றிவந்தால் ஏதும் கைமேல் பலன் கிடைக்கும் என்ற காரணமா என்பது புரியவில்லை.
இது சென்னையில் என்றால் திருச்சியில் கடந்த பல நாட்களாக பேட்டரிகார் இயங்கவில்லை. காரணம் கேட்டால் அதிலுள்ள பேட்டரி பழுதடைந்துள்ளதாக கூறினார்கள். கடந்த 01.09.2010 அன்று இரவு 9மணிக்கு இரயில் நிலையம் சென்றபொழுது கார் இயங்கிக்கொண்டிருந்தது. சந்தோஷத்துடன், ஏறி பயணம் செய்ய லாம் என நினைத்து அருகில் சென்று விசாரித்தால் ஓட்டுநரிடமிருந்து கடினமான முகத்துடன் கடினமான பதில் அதே நேரத்தில் ஒரு பணக்கார பெண்மணி ஒரு உதவி கேட்க அந்தபக்கம் ஓட்டுநரின் கவனம் திரும்ப நாங்கள் இரண்டாம் தர நபர்கள் ஆனோம். அந்த பெண்மணி அழைத்தது மலைக்கோட்டை இரயில் நின்ற ஒன்றாம் எண் நடைமேடையில் எஜ்சின் பக்கத்திற்கு நாங்கள் செல்ல வேண்டிய பகுதி இரயிலின் பின்புறப் பகுதியாம்.
எனவே அவர்கள் அழைத்த காரியத்தினை முடித்துவிட்டு பிறகு எங்களை அழைத்துச் செல்கிறேன் என்றார். அருகில் இருந்த நபர் உடனடியாக குறுக்கிட்டு மாற்றுத்திறனாளர் பெட்டியும் முன்பக்கமாகத்தான் உள்ளது எனக்கண்டிப்பாக கூறியதும்தான் எங்களையும் வேண்டாவெறுப்பாக ஏற்றிக்கொண்டார். இந்த நிகழ்வுகளை பார்க்கும்பொழுது நான் மேற்ககூறியதுதான் காரணமாக இருக்கும் என எண்ணத்தோன்றுகிறது.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் எண்ணம் உயர்ந்ததாகவும் சமூதாய நோக்குடனும் இருக்கலாம் ஆனால் அதில் பணிபுரியும் பணியாளர்கள் அந்தத் திட்டத்தினை பாழ்படுத்திவிடுகின்றனர்.
தொண்டுள்ளத்துடன் ஒரு செயல் துவங்கும்பொழுது அதில் ஈடுபடுத்தப்படும் அனைவரும் அதே எண்ணத்துடன் இருந்தால் மட்டுமே அந்த செயல் ஈடேரும். இல்லாவிட்டால் இப்படித்தான் அரைகுறைத்தனத்துடன் நடக்கும்.
No comments:
Post a Comment