இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

முதல்வர் கருணாநிதி தலைமையில் மாற்றுதிறனாளர்களுக்கு தனித்துறை

மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துறை முதலமைச்சர் கருணா‌நி‌தி நேரடி மேற்பார்வையில் இயங்கும் எ‌ன்று த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

2010-11ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையை அன்பழகன் இன்று தாக்கல் செய்தார். அதில், உடல் ஊனமுற்றோர் என்ற பட்டியலில் மனித சமுதாயத்தில் காது கேளாதவராய் - கண் தெரியாதவராய் - வாய் பேச முடியாதவர்களாய் - கைகால்களைப் பயன்படுத்த இயலாதவர்களாய் உள்ள அனைவருமே இடம் பெறுகிறார்கள். இவர்களைக் குறிப்பிட்ட அவயவங்களைப் பயன்படுத்த முடியாதவர்கள் என்று ஒதுக்கிவிடாமல்
- அல்லது ஒரு தனிப் பட்டியலில் அவர்களைச் சேர்த்துவிடாமல், இழித்துரைப்பது போல் இன்று தோன்றுகிற பெயர்களான குருடர், செவிடர், நொண்டி, ஊனம், முடம், மனநோயாளி, என்றெல்லாம் அவர்களை அழைக்காமலும், பொதுவாக ஊனமுற்றோர் என்பதற்குப் பதிலாகவும்; ஒரு அவயவத்தின் செயல்பாட்டுக் குறையால், அவர்களுடைய மற்றொரு அங்கத்தின் திறன் இயற்கையாகவே மேலும் ஒரு பங்கு சிறப்புறுகிறது என்னும் அறிவியல் அடிப்படையில், அவர்களை எல்லாம் “மாற்றுத் திறனாளிகள்” என்று அழைக்கின்ற முறை, சில ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 2007ஆம் ஆண்டிலேயே, ஐக்கிய நாடுகள் சபையிலே விவாதிக்கப்பட்டு, அதன் தொடர்பான இணக்க ஒப்பந்தம் ஒன்று ஏற்கப்பட்டுக் கையெழுத்திடப்பட்டுள்ளது.

அந்த இணக்க ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டுள்ள நாடுகளில், ஏழாவது நாடாக இந்தியா இடம் பெற்றுள்ளது. அந்த ஒப்பந்தப்படி கல்வி, மருத்துவ வசதி, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு வாழ்வாதார உரிமைகள் அனைத்திலும், அவர்களுக்குரிய பங்கு பெற்றவர்களாகவும், சமூகத்தில் சம உரிமையும் வாய்ப்பும் பெற்றவர்களாகவும் வாழ வழி வகுக்க, இந்த அரசு ஆவன செய்யும். மேலும் 1995 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஊனமுற்றோருக்கான (சம வாய்ப்புகள்,உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழுப்பங்கேற்பு) சட்டத்தை ஐக்கிய நாடுகள் இணக்க ஒப்பந்தத்தின் அடிப்படையில் விரைவில் மாற்றி அமைக்க மைய அரசை வலியுறுத்துகிறோம்.

மாநில அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்த “மாற்றுத் திறனாளிகள்” பெற்றிட நிர்ணயிக்கப்பட்டுள்ள வருவாய் உச்சவரம்பு முற்றிலும் நீக்கப்படும். மாற்றுத் திறனுடையோர் உயர்கல்வி பயில்வதற்கு ஏதுவாகக் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்த இந்த அரசு, வரும் கல்வி ஆண்டிலிருந்து தனிக்கட்டணம் செலுத்துவதிலிருந்தும் விலக்கு அளிக்கும்.

அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் ‘மாற்றுத் திறனாளி’ மாணவர் இல்லங்களில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு, உணவுச் செலவாக மாதம் ஒன்றுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் ரூபாய் 200 உதவித் தொகை, ரூபாய் 450 ஆக உயர்த்தப்பட்டு இனி வழங்கப்படும்.

மன நோயாளிகள் உள் நோயாளிகளாகத் தங்கிச் சிகிச்சை பெறும் சிறப்பு அரசு மனநல மருத்துவமனை, தமிழகத்தில் சென்னையில் மட்டும்தான் உள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள மன நோயாளிகளும் சிகிச்சை பெற இந்த மருத்துவமனைக்குத்தான் வரவேண்டியுள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, தென் மாவட்டங்களுக்குத் தனியாக ஒரு சிறப்பு அரசு மனநல மருத்துவமனை தேனி நகரில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். மனநோய்வாய்பட்டவர்களுக்குத் தங்கும் வசதி, மருத்துவ ஆலோசனை ஆகியவற்றை அளிக்கும் வகையில் மன நோய்வாய்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்களை அமைத்து நடத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு இந்த அரசு நிதியுதவி அளிக்கும்.

இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ஒரு மறுவாழ்வு இல்லம் என்ற அடிப்படையில் 10 மறுவாழ்வு இல்லங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் ரூபாய் ஒரு கோடி நிதி உதவியை இந்த அரசு அளிக்கும்.

இந்தியாவிலேயே முதல்முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பு அளித்து நலத்திட்ட உதவிகள் வழங்க தனி நல வாரியம் தமிழ்நாட்டில்தான் அமைக்கப்பட்டுள்ளது. தங்களைத் தாங்களே பராமரித்துக்கொள்ள இயலாத மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு, வருவாய் உச்சவரம்பின்றி 500 ரூபாய் வீதம் மாதாந்திர உதவித் தொகையை இந்த அரசு வழங்கி வருவதால் 50,000 பேர் பயன் பெற்று வருகின்றனர்.

கண் பார்வையற்றோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு உதவித் தொகைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஆசிரியப் பணிபுரிய சிறப்பு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காது கேளாதோருக்குக் குழந்தைப் பருவத்தின் தொடக்கத்திலேயே கண்டறிந்து சிறப்புக் கல்வி அளிக்கும் பள்ளிகள் மாவட்டந்தோறும் தொடங்கப்பட்டுள்ளன. கை, கால் ஊனமுற்றோருக்குப் பயணச் சலுகைகளுடன், நாட்டிலேயே முதல்முறையாக மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டிகள் முதலான பல்வேறு உதவிக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பற்ற பார்வையற்றோருக்கு நிவாரணத் தொகை வழங்கும் திட்டம், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு 60,000 பேர் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளனர். இந்தியாவிலேயே முதல்முறையாக தசைச் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் 2008-2009 ஆம் ஆண்டிலிருந்து 1,000 பேருக்கு மாத உதவித் தொகையாக 500 ரூபாய்
வழங்கப்பட்டு வருகிறது.

யானைக்கால் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் இந்நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு, கால், கை போன்ற அவயவங்களை பயன்படுத்தவே முடியாத அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ள நான்காவது வகை நோயாளிகளுக்கு மாத உதவித் தொகையாக ரூபாய் 400 வரும் நிதியாண்டில் தொடங்கி தொடர்ந்து வழங்கப்படும்.

இவ்வாறு முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக நிதி ஒதுக்கி, இந்த அரசு மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 2005-2006 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் நலனுக்குச் செலவிடப்பட்ட தொகை ரூபாய் 49 கோடி அளவாக இருந்ததை, வரும் நிதியாண்டில் ரூபாய் 176 கோடியாக உயர்த்தியுள்ளதுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துறை முதலமைச்சர் நேரடி மேற்பார்வையில் இயங்கும் எ‌ன்று அ‌ன்பழக‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

No comments:

Post a Comment