இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

எனது மனம் கவர்ந்த கவிதைகள்

கனவு வாழ்க்கை போதுமெனக்கு...

கண் பார்வையிழந்து
கடந்தன இருபது ஆண்டுகள்
என்றாலும்
என் பாட்டியை ஒருநாள் இரவு பார்த்தேன்
நாற்பதாண்டுகளுக்கு முன் மறைந்தவள்!
அதே முகம், அஹ்டே கனிவு
அதே சிவந்த நிறம்‍ மறுநாள்
எனக்குள் கொள்ளை மகிழ்ச்சி.

இன்னொரு நாள் கனவில்...
இருபதாண்டுகளுக்குமுன் மருத்துவமனையில்
என்னைச் சேர்த்தபொழுது கண்ணீர்விட்ட
என் தந்தை வந்தார்.
இறுக்கமான மனிதருக்குள் எத்தனை அன்பு

எனக்குள் இன்னும்
மிச்சமிருக்கிறது அவர் ஆளுமை
அவரின் தந்தைபேறு
என் தவம்
இன்னொரு நாள் கனவில் என் தாய்...
என்னோடு சேர்த்து
எட்டுக்குழந்தைகளை ஆளாக்கியவர்.
எத்தனை வதைகள்,எத்தனை வேதனைகள்
எல்லாமே நான் பார்க்க அனுபவித்தவை
அருகில் வைத்து தடவிக்கொடுத்தார் என்னை
கண்ணீர் விட்டேன் கனவிலும்...

எனக்குள் உயிர்ப்பாய்
இன்றும் இவர்கள்
கனவுக் காட்சிகள் போதும்
எனக்கு...
கவிஞர் கோவை ஞானி


புதிய கண்ணகி

அரசின்
கருணைத் தொகைக்காக‌
அலையாயலைந்தாள்
அந்த விதவை

கையெழுத்துக்கள்
பல வாங்கிக் கொடுத்தாள்

கடைசியில்
அந்தப் பணமும் வந்தது
பணத்தை கொடுத்த‌
அலுவலர் கை நீட்டினார்...

நீயும்
விதவை தானா?
அவன் முகத்தில்
விசிறியடித்தாள்
பணத்தை...
கவிஞர் கர்ணன்
மதுரை.


திருநங்கை

ஆண்பாலிலும் அகப்படவில்லை
பெண்பாலிலும் பொருத்தமில்லை
அரவாணி என ஆகிவிட்டதால்
அரவணைக்கக் கூட யாருமில்லை

விலங்கு, பறவை
தாவரம் மனிதரென‌
அனைத்தும் அடையாளப்
பெயர் பெற்று அடைகின்றது கௌரவமே!
நாங்கள் மட்டும்
அடையாளம் காணாத‌
ஆச்சர்யக் குறியானோம்

அவலமே கண்டு கண்டு
அவனியிலே நொந்துவிட்டோம்
மனிதனையே மதிக்காத சமூகம்
மனிதனாகவே எண் ணாதவரையா மதிக்கும்?

குரோமோசோமின் குறும்பதுவால்
குழப்பமே வாழ்வானது
குனியக் குட்டும் சமுதாயத்தில்
மனமும் கூட தாழ்வானது

விதியை மீறிய விளையாட்டை
இயற்கை எப்படி ஈடுசெய்யும்?
விளக்க முடியா பதிலுக்கு
வினாக்குறியே விடையாகும்.

கவிஞர் இரா.சுமதி
தேனி


நம்பிக்கை

வீழ்வது பற்றி
ஒருபோதும்
எங்களுக்கு
கவலையில்லை
எழுவது உறுதி
என்பதால்...

கவிஞர் சே. ஜெயக்குமார்
சென்னை


பிரசவ வேதனை

ஆண்டவனே
பிரசவ வேதனையை
பெண்களுக்கு மட்டும் ஏன் கொடுத்தாய்?

அக்னி சாட்சியாக‌
இன்ப துன்பங்களை
பகிர்ந்து வாழ்கிறோம் என்று
சங்கல்பம் கொண்டதை
நீயே பொய்த்து விட்டாயே?

அன்பின் வெளிப்பாட்டில்
ஒரு அராஜகமா?
ஆசை முத்தத்திற்கு
ஆயுள் தண்டனையா?

இறைவா
சிசுவை வெளிகொணர‌
அகிம்சை வழிகளை சிருஷ்டிக்க‌
ஏன் மறந்தாய்?

அடுத்த ஜென்மத்தில்
என்னை பெண்ணாகவும்
அவளை எனக்குரிய ஆணாகவும்
படைப்பாய் ஆணடவனே!

அவளிடம்
இதனை சொல்லிவிடாதே
அவள் என்ன சொல்வாள் என்று
நான் கூறவும் வேண்டுமா?

கவிஞர் வெ. எழிலரசன்
சேலம்


நீயும் ஆண்டவன் தான்...

சுழி போட்டு
செயல் தொடங்கும்
விநாயகப் பெருமான்
முழுமுகம் இல்லாதவன்

ஜாதகத்தில்
உச்சத்தில் நன்மையாம்
குரு தட்சிணாமூர்த்தி
ஒரு கால் இல்லாதவன்

சகல் காரியமும்
நடக்க வைக்கும்
சண்டீகேசுவரன்
இரு காது கேட்காதவன்

ஒரு
அவதாரத்தில்
அம்மன் கூட‌
விகாரமானவள்

அட விடுங்கள்
அகிலத்தையே
ஆட்சி நடத்துவதாய் கூறும்
சிவன் கூட‌
அர்த்தநாரீஸ்வரர்

ஊனமானவனே!
உரக்கச் சொல்கிறேன்
நீயும் ஆண்டவன் தான்
உயர்ந்த இடத்தில் இருப்பதால்...

அரசு ஆணைப்படி
நீ மாற்றுத்திறானுடையவன் மாற்றானை விட நீ திறமையானவன்

பிறகெதற்கு
ஊனத்தை பற்றி
ஒப்பாரி வைக்கிறாய்
நன்றாக
உழைத்து எரி
உன் தீபத்தில்
உலகம் ஒளி பெறட்டும்

கவிஞர் கவி.பெரியசாமி
கரூர்



கல்விக்கண் காமராஜர்

இன்று விலைபோகும் கல்வியை
அன்றே இலைபோட்டு பரிமாறியவர்
ஜாதிமத வேறுபாடின்றி
வீதிதோறும் கல்வியை விதைத்தவர்!

கனவுகளோடு பள்ளி வந்த‌
சின்னஞ் சிறார்க்கும்
உணவளித்த மூத்தவர்!
விளையாட்டுப் பிள்ளைகளையும்
நல்ல சிலையாக வடிக்கும்
கல்வியெனும் கலையறிந்த கலைஞர்!

ஆடுமேய்த்தவன் கையிலும்
ஏடுகொடுத்த சித்தர்!
சாணம் சுமந்த சிறுவனுக்கும்
ஞானம் போதித்த புத்தர்!

தமிழகத்து பட்டதாரிகளுக்கெல்லாம்
சுயவேலை திட்டம் கொடுத்து
வரலாறு படைத்தவர்!

அறியாமையை தன்
அறிவாலே உடைத்தவர்!

மாட மாளிகைகள் கட்டாமல்
பாட சாலைகள் கட்டிய‌
முதல்வர்!
ஒவ்வொரு தமிழ் வீட்டிற்கும்
தத்துப் புதல்வர்!

மாக்களாக இருந்தவர்களை
மக்களாக மாற்றிய மனிதர்!
நகரமாக இருந்த சமூகத்தை
சிகரமாக மாற்றிய புனிதர்!

படிக்காத மேதையே!
உன்னை படிக்காத மேதை
எவரெம்று சொல்!
உன் பெயர் தான்
மனங்கள் என்றும்
உச்சரிக்கும் சொல்...!

கவிஞர்.துளிர்
மதுரை

No comments:

Post a Comment