திருச்சி: திருச்சியில் உள்ள பள்ளி செல்லாத மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தேசிய அடையாள அட்டை வழங்கி, பள்ளிச் சேர்க்கை, கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள், வங்கிக்கடனுதவி, மாதாந்திர உதவித்தொகை, இலவச பஸ் பயணச்சலுகை மற்றும் திருமண நிதியுதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறன் கொண்டோர் பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்த்து, அவர்களது கல்வி தரத்தை உயர்த்திடும் வகையில், இந்தாண்டு, மாற்றுத்திறன் படைத்த மாணவ, மாணவிகள் பள்ளி சேர்க்கை சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ், மாற்றுத்திறன் படைத்த மாணவ, மாணவியரை சாதாரண பள்ளியில் சேர்க்கும் திட்டத்தின் கீழ் இதுவரை ஆயிரத்து 557 மாணவரும், ஆயிரத்து 917 மாணவியரும் என மொத்தம் மூன்றாயிரத்து 474 பேர், ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை சேர்க்கப்பட்டுள்ளனர். அதில், 476 பார்வை குறையுடையவர், 142 பார்வையற்றோர், 432 காதுகேளாதோர், 255 காது கேளாத, வாய்பேச இயலாதோர், ஆயிரத்து 38 கை,கால் செயலிழந்தோர், ஆயிரத்து 105 மனவளர்ச்சி குன்றியோர், 26 பல்வகை மாற்றுத்திறனாளிகள் அடங்குவர்.
மாற்றுத்திறன் படைத்த மாணவர் அனைவரும் இயல்பான கல்வி முறை அல்லது உள்ளார்ந்த கல்வி முறை திட்டங்களில் 100 சதவீதம் சேர்பபதுக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுக்கு ஆதாரமாக, திருச்சி குமரன் நகர் சிவானந்தா பாலாலயா பள்ளியில் 15 மாற்றுத்திறனாளிகளின் சேர்க்கையை, போக்குவரத்துதுறை அமைச்சர் நேரு துவக்கி வைத்தார்.
கலெக்டர் (பொ) தட்சிணாமூர்த்தி, மேயர் சுஜாதா, எம்.எல்.ஏ.,க்கள் அன்பில் பெரியசாமி, சேகரன், சௌந்தரபாண்டியன் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சியாமளா, பள்ளி தாளாளர் மீனாட்சி, கமிட்டி உறுப்பினர் இந்திரா, முதல்வர் சசிகலா உட்பட பலர் பங்கேற்றனர். சிறப்பு முகாம் துவக்கத்தை தொடர்ந்து, பள்ளி செல்லா மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சியாமளா, எஸ்.எஸ்.ஏ., கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் அகஸ்டின் பீட்டர் பாத்திமா, உதவித்திட்ட அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் மேலும் பல சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்கின்றனர்.
நன்றி:தினமலர்.காம்
No comments:
Post a Comment